Wednesday 3 September 2014

ஜல்லிக்கட்டு



மாடு என்னும் சொல்லுக்குச் ‘செல்வம்’ என்று பொருளுண்டு. மாட்டுக்கும் மனிதர்களுக்குமான உறவுகள் பற்றிப் பல செய்திகள் வரலாறு நெடுகிலும் உள்ளன. மாடுகளைப் பழக்கி வேளாண்மையில் ஈடுபடுத்தியதாலேயே மனிதன் நிலைகொள்ள முடிந்தது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு மாடுகளும் அவற்றின் உழைப்பும் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. பசுக்களும் எருமைகளும்கூட வேளாண் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டன எனினும் அவற்றின் முதன்மையான உற்பத்திச் செயல்பாடு பால் வழங்குவதுதான். இன்றைக்கும் பால் பெரும் விற்பனைப் பொருள்களுள் ஒன்று.

எருமைக் கிடாக்கள் உழவுக்கு இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றன. எனினும் உழவு, ஏற்றம், வண்டி, தாம்பு முதலிய வேலைகளுக்குக் காளைகளே ஏற்றவை. காயடிக்கப்பட்டபின் எருது என்னும் பெயர் பெறும் அவற்றின் உழைப்பை எல்லாக் காலத்திலும் பயன்கொண்டதோடு போற்றியும் வந்திருக்கிறது மனித சமூகம். பதின்பருவத்து ஆண்மகனைக் காளை, மிடல், ஏறு என்றெல்லாம் அழைப்பதுண்டு. மாட்டு மந்தையின் அளவை வைத்து ஒரு குழுவின் செல்வத்தை அளவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. ஒரு குழு மற்றொரு குழு வோடு போர் தொடங்குகிறது என்றால் முதலில் மாட்டு மந்தைகளைக் கவர்ந்து வருவது மரபு.

போர் பற்றிய புறப்பொருள் இலக்கணத்தில் முதல் திணை வெட்சி. ‘வெட்சி நிரை கவர்தல்.’ அதாவது வெட்சிப்பூவைச் சூடிச் சென்று ஆநிரைகளைக் (மாட்டு மந்தை) கவர்ந்து வருதலை விவரிக்கும் திணை இது. ஆநிரை மீட்டல் கரந்தைத் திணை. மாடுகளைக் கவர்ந்து வருவது, அவற்றை அனைவருக்கும் பகிர்ந்து வழங்குவது, அவற்றை மீட்பது எனப் பல துறைகள் புறப்பொருள் இலக்கணத்தில் உண்டு. கன்றுகளாகத் துள்ளித் திரியும் மாடுகளை வேலைகளுக்குப் பழக்குவது அருங்கலை. அதுவும் பாய்ச்சல் மாடுகளாக இருப்பவற்றைப் பழக்கப் பெரும்பிரயத்தனம் தேவை. பலரது உதவியும் உழைப்பும் வேண்டும். கி.ராஜநாராயணனின் ‘கோபல்லபுரம்’ நாவலில் காட்டு மாடு ஒன்றைப் பிடிப்பதும் அவற்றை வேலைகளுக்குப் பழக்குவதுமாகிய நிகழ்ச்சி வருகிறது. கந்தர்வனின் ‘கொம்பன்’ என்னும் சிறுகதையில் கிடையில் சுதந்திரமாகத் திரியும் கொம்பன் மாடுகளைப் பிடித்து வந்து உழவு வேலைகளுக்குப் பழக்குவது தொடர்பான அரிய காட்சிச் சித்திரம் உள்ளது.

மாடுகளின் துள்ளலை அடக்கி அவற்றை வேலைகளுக்குப் பயன்படுத்துவதை ஒரு விளையாட்டாக்கிய செயல்தான் ‘ஏறு தழுவுதல்.’ ஆடுமாடுகள் வளர்ப்பதையே தம் தொழிலாகக் கொண்டிருந்தது முல்லை நிலம். இங்கு குறைவான அளவிலேயே உழவுத்தொழில் நடைபெறும். பால், தயிர், மோர் ஆகியவை பண்டமாற்று விற்பனைப் பொருளாக இருந்தமைக்குச் சங்க இலக்கியச் சான்றுகளே உண்டு. மாடு வளர்ப்பையே தம் பிரதான தொழிலாகக் கொண்ட முல்லை நிலத்தில்தான் ‘ஏறு தழுவுதல்’ என்னும் வீர விளையாட்டு நடந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் ஒன்றாகிய கலித்தொகையின் ‘முல்லைக்கலி’ பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஏறு தழுவுதலை விவரிக்கின்றன. அவற்றில் காளைகளின் வகைகள், அவற்றின் சீற்றம், காளைகளைத் தழுவிப் பிடிக்கும் ஆண்களின் வீரம் ஆகியவை பேசப்பட்டுள்ளன.

காளைகளோடு போராடி உயிர் துறப்பது வீரமாகக் கருதப்பட்டுள்ளமையையும் காண முடிகின்றது. காளையை அடக்கி வீரத்தை நிறுவுபவனையே முல்லை நிலத்துப் பெண் மணம் செய்துகொள்வாள். ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்பது முல்லைக்கலிப் பாடலில் வரும் புகழ்பெற்ற அடிகள். ‘எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்’ என ஏறு தழுவுதல் நடக்கும் களம் பற்றிய சித்திரமும் வருகின்றது. ஏறு தழுவும் களத்தில் புகும் மாடுகளைப் பற்றிய வருணனைகள் மிகச் சிறப்பாக அப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. ‘நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவை’ என்கிறது ஒரு பாடல். தமிழ் மரபு, பண்பாடு சார்ந்த பெரும்பதிவைக் கொண்டிருக்கும் கருவூலம் இந்தப் பாடல்கள்.

இதன்பின் இலக்கியப் பதிவுகள் இல்லை என்றாலும் ஏறு தழுவுதல் நடந்தமையைக் காட்டும் பருண்மைச் சான்றுகளாக நடுகற்கள் விளங்குகின்றன. வீரப் போர் புரிந்து இறந்தவனுக்கு எடுத்து வழிபடப்படுவது நடுகல். இவ்வழிபாடே மக்கள் தெய்வங்களாகக் காடுமேடுகளில் எல்லாம் கோயில்களாகப் பரவிக் கிடக்கின்றது. எதிரியோடு போராடி மாண்டவனுக்கு மட்டுமல்ல, விலங்குகளோடு போராடி வீர மரணம் அடைந்தவனுக்கும் நடுகல் உண்டு. புலியோடு போராடி மாண்டவனுக்கு எடுக்கப்பட்ட கல்லைப் ‘புலிக்குத்திக் கல்’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதுபோலப் பன்றிகுத்திக் கல், குதிரைகுத்திக் கல், யானைப்போர் நடுகல் எனப் பலவகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று ‘எருது பொருதார் கல்’ என்பதாகும். இதில் காளையின் கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிற்பங்களைக் கொண்ட நடுகற்கள் தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ளன. தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கிடைத்துள்ள கற்கள் குறிப்பிடத்தக்கவை. சில நடுகற்களில் எழுத்துக்களும் உள்ளன. சேலம் மாவட்ட ‘எருது பொருதார் கல்’ ஒன்றில் காணப்படும் வாசகம் இது:

கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடி பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்ட கல்லு.

கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடிப் பட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவன் மகன் பெரியபயல் எடுத்த நடுகல் இது. இதில் ‘எருது விளையாடி’ என்னும் தொடர் இடம்பெறுவது கவனத்திற்குரியது. ஏறு தழுவுதலை ஒரு விளையாட்டாகக் கருதியுள்ளார்கள் என்பதன் சான்று இது. இக்கல் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய கற்கள் வெவ்வேறு நூற்றாண்டைச் சார்ந்தவையாக உள்ளன. ஆகவே ஏறு தழுவும் விளையாட்டு தொடர்ந்து தமிழ் மரபில் நிலவி வந்திருக்கிறது என்பது தெரிகிறது.

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் இத்தகைய விளையாட்டுக்கள் நடந்தமைக்குப் பல சான்றுகள் கண்கூடாகக் கிடைக்கின்றன. ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம், குபராவின் வீரம்மாளின் காளை, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் ஆகியவை முக்கியமான இலக்கியப் பதிவுகள். திரைப்படங்களில் பல காட்சிகள் உள்ளன. தாய்க்குப் பின் தாரம், வீர பாண்டிய கட்டபொம்மன், முரட்டுக்காளை, விருமாண்டி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. வீரபாண்டிய கட்டபொம்மனில் வரும் ‘அஞ்சாத சிங்கம் என் காளை அது பஞ்சாப் பறக்கவிடும் ஆளை’ என்னும் பாடல், காளையின் வீரத்தைப் புகழ்கிறது. புகைப்படப் பதிவுகளும் பல.

இவ்விளையாட்டு தமிழர் திருநாளாகிய தைப்பொங்கலோடு நெருங்கிய தொடர்புடையது. அறுவடைத் திருநாளாகிய பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வெவ்வேறு வகையில் தொடர்ந்து நடைபெறக்கூடியது. சூரியன் பொங்கலாகிய வாசல் பொங்கல், மாட்டுப்பொங்கல் ஆகியவற்றோடு முடிவுறுவது அல்ல இது. அவற்றைத் தொடர்ந்து வரும் காணும் பொங்கல் என்பதன் பரிமாணங்கள் பல. சென்னையில் உள்ளோர் பெருங்கூட்டமாகக் கடற்கரையில் ஒருநாள் மாலை கூடுவதையே காணும் பொங்கல் என்று இன்று கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது. கிராமங்களில் காணும் பொங்கல் அன்று கூத்து நடத்துவது வழக்கம். அன்று மட்டுமல்ல, தொடர்ந்து பல நாட்கள். மூத்தோர் வழிபாடும் கூத்தும் இணைந்திருக்கும். குலதெய்வ வழிபாடும் கலை நிகழ்ச்சிகளும் இணைந்திருக்கும். பொங்கலும் விளையாட்டுக்களும் பிரிக்க முடியாதவை. இவையெல்லாம் தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும். இவற்றைக் கொண்டாட்ட மாதங்கள் எனலாம். இக்கொண்டாட்டத்தில் மாடுகளுக்கும் பங்குண்டு. ஜல்லிக்கட்டு என்னும் விளையாட்டு மட்டுமே ஊடக வெளிச்சம் பட்டு வெளியுலகிற்குத் தெரிந்திருக்கிறது. மஞ்சு விரட்டு, மாடு விடுதல் முதலிய பல விளையாட்டுக்கள் உள்ளன. இவை பொங்கல் பண்டிகையோடு இரண்டறக் கலந்தவை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமும் மரபும் கொண்ட விளையாட்டு இது என்பதற்குப் பதிவுகளும் நடைமுறைகளும் என இப்படிப் பல சான்றுகள் உள்ளன. இன்று ‘மிருகவதை’ என்னும் ஒற்றை நோக்கில் மட்டும் பார்த்து இவ்விளையாட்டிற்குத் தடை விதித்திருக்கிறது நீதிமன்றம். மிருகவதை என்றால் முதலில் தடை செய்ய வேண்டியவை என ஒரு பெரும்பட்டியலே தரலாம். கோழிப் பண்ணைகள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு நடப்பது என்பதே மறந்துபோன விஷயம். இன்னும் ஆட்டுப் பண்ணைகள், மாட்டுப் பண்ணைகள், முயல் பண்ணைகள், காடைப் பண்ணைகள் எனப் பலவகைப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் வளர்க்கப்படும் மிருகங்களும் பறவைகளும் சுதந்திர வெளியில் நடமாடுகின்றனவா? இறைச்சிக்காக மிருகங்கள் கொல்லப்படும் விதம் பற்றி இந்த மிருக வதைத் தடுப்பாளர்கள் ஏன் பேசுவதில்லை?

பன்றியைக் கொல்வதற்குக் குத்தூசி என்னும் ஒருவகைப் பெரிய ஊசி பயன்படுத்தப்படுகின்றது. பின்னங்காலுக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அவ்வூசியைச் சொருகுகிறார்கள். பன்றி கிட்டத்தட்டப் பத்து நிமிடம் துடிதுடித்துச் சாகிறது. அடிமாடுகளைக் கொல்லப் பலமுறைகள் உள்ளன. எந்த முறையாக இருந்தாலும் மாடு சாவதற்குக் கால் மணி நேரம் ஆகிறது. இவற்றைவிட மாடுகளைப் பயன்படுத்தும் எந்த விளையாட்டும் கொடூரமானதல்ல. பண்ணைகளில் பெருநிறுவனங்கள் முதலீடு செய்யும் காலம் இது. இறைச்சி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகும் முக்கியப் பண்டம். ஆகவே மிருகவதைத் தடுப்பாளர்கள் அவற்றில் தலையிட மாட்டார்கள்.

ஜல்லிக்கட்டில் மாடு எதுவும் கொல்லப்படுவதில்லை. சாராயம் கொடுத்து வெறியேற்றுதல் முதலியவை நடந்திருக்கின்றன. எல்லா இடங்களிலும் அது வழக்கமல்ல. அவற்றை முன்னரே நீதிமன்றம் தடுத்து நிபந்தனைகள் விதித்திருக்கிறது. அந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்பட்டால் போதுமானது. விபத்துக்கள் நடைபெறுகின்றன என்பதால் நாற்கரச் சாலைகளையும் சுங்கச் சாவடிகளையும் மூடி விடுவார்களா? விபத்துக்களைத் தடுக்க ஆயிரம் யோசனைகள் சொல்லப்படுகின்றன. ஜல்லிக்கட்டிலும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கடுமையாக்கலாமே தவிர அதைத் தடை செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஜல்லிக்கட்டில் மனித உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்னும் வாதமும் வைக்கப்படுகின்றது. எத்தனையோ விளையாட்டுக்களில் களத்திலேயே வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அடிபட்டிருக்கிறார்கள். அதற்காக அவ்விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டனவா? கிரிக்கெட்டிலோ கால்பந்திலோ ஒரு வீரர் லேசாகக் காயம்பட்டாலே காத்திருக்கும் மருத்துவக் குழு உடனடியாக ஓடிவந்து களத்திலேயே முதலுதவி செய்கிறது. தேவைப்பட்டால் களத்திற்கு வெளியேயும் சிகிச்சை தரப்படுகின்றது. ஜல்லிக்கட்டு நடக்கும்போது அவ்விதம் மருத்துவக் குழுக்கள் தயாராக வைக்கப்பட வேண்டும் என்னும் விதி அமல்படுத்தப்பட்டால் போதாதா? பணக்கார விளையாட்டுக்களுக்கு ஒரு நியதி, சாதாரண மக்கள் விளையாட்டுக்களுக்கு வேறு நியதியா?

ஜல்லிக்கட்டில் மாடும் மனிதனும் தொடர்புபட்டிருக்கிறார்கள். இந்தத் தொடர்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே தொடங்கிய பந்தம். அதன் எச்சமே இன்று விளையாட்டு வடிவில் உள்ளது. ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, மாட்டோடு தொடர்புடைய விளையாட்டுக்கள் பல. மஞ்சு விரட்டு என்பது ஊரில் உள்ள மாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைச் சுதந்திர வெளியில் திரிய விடுவதாகும். பாய்ச்சல் மாடுகள் அதில் பயன்படுத்தப்படுவதில்லை. வட மாவட்டங்களில் இவ்விளையாட்டு உயிர்ப்புடன் நிலவுகின்றது. ஊருக்குள்ளும் காட்டுப்பாதைகளிலும் ஓடும் மாடுகளும் அவற்றை விரட்டிச் செல்லும் மக்களும் கொண்டாட்டத்தில் இணைகிறார்கள். மாடுகள் வயல்களிலும் தீவனப் போர்களிலும் சென்று தஞ்சமடைகின்றன. அவற்றை உரிமையாளர்கள் தேடிச் சென்று பிடித்து வருகிறார்கள். கயிற்றால் கட்டப்பட்டுக் கிடக்கும் மாடுகளுக்கு ஒருசில மணி நேரம் சுதந்திரம் தரும் விளையாட்டு இது.

நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மாடு விடுதல் என்னும் விளையாட்டு நடைபெறுகின்றது. இது மாடுகளுக்கு இடையே நடைபெறும் ஓட்டப் பந்தயம் போன்றது. ஒவ்வொரு ஊர் சார்பாக வளர்க்கப்படும் மாடுதான் இந்தப் பந்தயத்தில் பங்கு பெறுகின்றது. அம்மாடு வருடம் முழுக்க எந்தக் கட்டுப்பாடும் இன்றி வளர்கிறது. வரிசையாக நிறுத்தப்படும் வெவ்வேறு ஊர் மாடுகள் ஒரே சமயத்தில் சீழ்க்கை ஒலியுடன் விரட்டப்படுகின்றன. அவற்றுள் எந்த மாடு முதலில் வருகின்றதோ அதற்குப் பரிசு தரப்படுகிறது. இந்தப் போட்டி ஒவ்வொரு ஊரிலும் ஒரு நாள் எனக் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தப்படுகின்றது. அறுவடை முடிந்து மக்கள் மகிழ்ச்சியாக விளையாடி மகிழும் விளையாட்டுக்கள் இவை. இவற்றில் பயன்படுத்தப்படும் மாடுகள் போற்றப்படுகின்றன. அவற்றைப் பேணி வளர்க்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்குப் பயன்படுத்தப்படும் மாடுகளின் வளர்ப்பும் அப்படித்தான். விளையாட்டுக்களுக்கென மாடு வளர்ப்பது என்பதே தனிக்கலை. அவற்றுக்கு என்ன வகைத் தீனி தர வேண்டும் என்பது தொடங்கி உடற்பயிற்சிகள் வரை பலவகைப் பேணல்கள் உண்டு. இப்போது விதிக்கப்பட்டிருக்கும் தடை மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள காலகாலத்திற்குமான பந்தத்தை அறுக்கும் முயற்சி. புராணக் கதை எதற்கும் உட்படாமல் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகையின் உயிர்ப்பைப் பறிக்கும் செயல்.

தமிழ்நாட்டு மாட்டினங்கள் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்டவை. நாட்டு மாடுகள் எனப்படும் இவை இன்று உயிர்த்திருப்பதே ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுக்களில்தான். நாமக்கல் மாவட்டத்தில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரபலம். இந்த ஜல்லிக்கட்டில் காங்கேயம் காளைகளே பெரிதும் பங்கேற்கின்றன. கும்பகோணம் வகை, அந்தியூர் வகை, நாட்டு மாடு என்றே அழைக்கப்படும் ஓர் இனம் ஆகியவையும் பங்கேற்கின்றன. இவற்றின் கொம்பு, திமில், உருவம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் புலிக்குளம், மலைமாடு, கும்பகோணம், உம்பலாச்சேரி ஆகிய இனங்கள் பங்கேற்பதாக அறிகிறேன்.



ஜல்லிக்கட்டு இல்லையென்றால் இந்த இனங்களின் நிலை என்ன? அழிவுதான். உழவு வேலைகளுக்கு இன்று மாடுகள் பயன்படுத்தப்படுவது அரிது. மாட்டு வண்டிகளும் அருகி வருகின்றன. பாலுக்கெனக் கலப்பினங்களும் வெளிநாட்டு இனங்களும் வளர்க்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு முதலிய விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டதும் நாட்டு மாட்டினங்கள் சந்தைகளில் அடிமாடுகளாக விற்பனை செய்யப்படும் செய்திகள் வருகின்றன. அந்தியூர் மாட்டுச் சந்தை, மோர்ப்பாளையம் மாட்டுச் சந்தை முதலிய மாட்டுச் சந்தைகளும் இனிக் களையிழந்து போய்விடும். மாடுகளின் சுழிகளை வைத்தும் வால், திமிலை வைத்தும் அவற்றின் தகுதியும் தரமும் நிர்ணயிக்கப்படுதலாகிய மரபும் முடிந்துவிடும். இவ்விதம் தமிழினம் காலகாலமாக வளர்த்துப் பயன்பெற்று வந்த நாட்டு மாட்டினங்களின் அழிவை இந்தத் தடை விரைவுபடுத்துகின்றது.

உலகமயமாக்கல் காலத்தில் உலகின் பல்வேறு மனித இனங்கள் தம் பண்பாட்டு வேர்களைக் கண்டறிந்து போற்றிப் பாதுகாக்கும் உத்வேகம் பெற்றுள்ளன. ஜல்லிக்கட்டுத் தடைச் சட்டத்தின் மூலமாகத் தம் பண்பாட்டை வெகுவேகமாகப் பறி கொடுக்கும் இனமாகத் தமிழினம் முதன்மை பெறுகின்றது.

No comments:

Post a Comment