கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஜல்லிக்கட்டைத் தடை செய்யவேண்டும் என்று பீட்டா போன்ற அமைப்புகளும், விலங்குகள் நல ஆர்வலர்களாக விளங்கும் பிரபலங்களும், விலங்குகள் நல அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. தொடக்கத்தில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டை அனுமதித்த உச்ச நீதிமன்றம் அண்மையில் முழுமையாகத் தடைசெய்துவிட்டது.
ஜல்லிக்கட்டு : ஓர் அறிமுகம்
தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் ஊற்றுக்கண்ணாக இருந்த தென்தமிழக மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிய கலையாக விளங்கும் ஜல்லிக்கட்டை தமிழ் இலக்கியங்கள் ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரில் சுட்டுகின்றன. விலங்குக்கும் மனிதனுக்குமான தொன்மப் போராட்டத்தின் நீட்சியாகத் தொட்டுத் தொடரும் வீர விளையாட்டுகளில் ஒன்றே ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டில் காளைகள் வதைக்கப்படுகின்றன என்பது விலங்குகள் நல ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. வால்களைக் கடிப்பதாகவும், மாடுகளுக்கு மது புகட்டுவதாகவும், காயங்கள் ஏற்படுத்தி வெறி ஊட்டுவதாகவும், தேவையற்ற உயிர்ப்பலி ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.
முற்றிலும் இயற்கை வழியில் நடந்த தமிழக விவசாயத்தில் கால்நடைகள் அளப்பரிய பங்களிப்பைச் செலுத்தி வந்தன. நிலத்தை உழவும், நீர் பாய்ச்சவும், அறுவடை செய்யவும், விற்பனைக்குக் கொண்டு செல்லவும் மாடுகளின் பங்களிப்பு விவசாயத்தில் தவிர்க்க முடியாதது. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்பதுதான் நம் விவசாயம். நெற்பயிரின் அடிப்பகுதி அப்படியே காட்டில் விடப்பட்டு வயலுக்கு உரமாகும். நடுப்பகுதி வெட்டி எடுத்து வரப்பட்டு மாட்டுக்கு உணவாகும். நுனிப்பகுதியில் தளைத்திருக்கும் பயிர் வீட்டுக்கு உணவாகும். வைக்கோலை உண்டுவிட்டு மாடுகள் தரும் கழிவே விளைச்சலுக்கு உதவும் உரமாகவும் இருந்தது.
தை முதல் நாளை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடிய மக்கள், தை இரண்டாம் நாளை கால்நடைப் பொங்கலாகக் கொண்டாடினர். மாட்டுப் பொங்கலின் தொடர்ச்சியாக நிகழ்ந்த விளையாட்டே ஜல்லிக்கட்டு. இது வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் தமிழரின் பண்பாட்டோடு தொடர்புகொண்ட கலையாகவும் இருந்துள்ளது.
விலங்குகள் நல ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டை தென் மாவட்டத்துக்கு மட்டுமான விளையாட்டு என்றே நீதிமன்றத்தில் சொன்னார்கள். அது சரியல்ல. தமிழகம் முழுவதும், ஏன் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இது நடத்தப்படுகிறது. தனித்து ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நிகழாவிட்டாலும் மஞ்சு விரட்டு, மாடு கூடுதல், மாடு அவிழ்த்து விடுதல், ஊர்மாடு, வடமாடு, எருதுவிடும் விழா, வடம், வாடி என பல பெயர்களில் நடத்தப்படுகிறது.
தஞ்சை வட்டாரத்தில், மாட்டுப் பொங்கலன்று கால்நடைகளைக் குளிப்பாட்டி நல்ல உணவு கொடுத்து இரவு ஒரு திடலில் கொண்டு வந்து கட்டுவார்கள். அங்கு ஒரு மரத்தின் கீழே இறைவனின் உருவைப் பிடித்துவைத்து பொங்கலிடுவார்கள். பின் பொங்கலைக் குவித்து பழங்களைச் சேர்த்து பிசைந்து மாடுகளுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டுவார்கள். மறுநாள் அதிகாலை மாடுகளின் கழுத்தில் தேங்காய், பழங்களைக் கட்டி அவிழ்த்துவிடுவார்கள். முறைப்பெண்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்க, இளைஞர்கள் மாடுகளைத் துரத்தி அந்த தேங்காயைப் பறிப்பார்கள். இதுவே சேலம், ஈரோடு, கோவை, காரைக்குடி பகுதிகளில் மஞ்சு விரட்டு என்ற பெயரில் நடக்கிறது.
அலங்காநல்லூர், அவனியாபுரம், சக்குடி, பாலமேடு, சூரியூர், சத்திரப்பட்டி, குலமங்கலம், அச்சம்பட்டி, பொதும்பு, கீழப்பட்டி, அய்யம்பட்டி, பழவராயன்பட்டி, பாரப்பட்டி, சோழங்குருணி, கலணை, கொசவப்பட்டி, அய்யாப்பட்டி என 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கென ஆயிரக்கணக்கில் காளைகள் வளர்க்கப்படுகின்றன. அவை வேறெந்த வேலைக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. பிற மாடுகளோடு சேர்த்து வளர்க்கப்படுவதும் இல்லை. தனித் தீவனம், தனிக் கொட்டில் என மிகுந்த கவனம் எடுத்து வளர்க்கப்படுகின்றன. நீச்சலடிக்க, நடக்க, ஓட எனத் தனிப்பயிற்சியும் அளிக்கப்படுவதுண்டு. ஜல்லிக்கட்டு காளைகள் இனப்பெருக்கம் செய்யப்படும் விதமும் வித்தியாசமானது. மதுரையைச் சுற்றியுள்ள மைக்குடி, மணப்பட்டி, ஊமச்சிக்குளம், தொட்டியப்பட்டி, குரண்டி, வாடிப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த கிடைமாட்டுக்காரர்களிடம் தகுதிவாய்ந்த ஜல்லிக்கட்டு கன்றுகள் வாங்கப்படுகின்றன. களத்தில் நின்று விளையாடும் காளைகளை நன்றாக மேய்ந்து கொழுத்த பசுவோடு இணைசேர்த்து ஜல்லிக்கட்டு காளைகளை உருவாக்குவார்கள். தகுதி வாய்ந்த கன்றுகள் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விலைபோகும். களத்தில் நின்று விளையாடும் மாடுகளை லட்சங்கள் கொடுத்து வாங்கிக்கொள்ள ஆட்கள் வரிசை கட்டுவார்கள். மாடுகள் வளர்ப்பதும் ஜல்லிக்கட்டில் ஜெயிப்பதும் கௌரவ அடையாளம்.
எல்லோரும் ஜல்லிக்கட்டு விளையாட முடியாது. உடல் தகுதியோடு மன தகுதியும் அவசியம். ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு 60 வகையான பயிற்சிகள் இருக்கின்றன. ஏகப்பட்ட விதிமுறைகளும் உண்டு. கொம்பைப் பிடிக்கக்கூடாது. திமிலை மட்டுமே பிடிக்கவேண்டும். வாலைப் பிடிக்கக்கூடாது. தண்ணீரில் விழுந்தால் பிடிக்கக்கூடாது. இப்படிப் பல விதிமுறைகள். முறையாக மாடு பிடிக்கப் பழகிய வீரர்களால் மாட்டுக்கும் பாதிப்பிருக்காது. வீரருக்கும் காயமேற்படாது.
விலங்குகள் நல ஆர்வலர்களின் பார்வை பட்டபிறகு ஜல்லிக்கட்டின் முகம் மாறிவிட்டது. அவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 77 விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளித்தது. 2 லட்ச ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும்; வீரர்களுக்கும் மாட்டுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டில் விட வேண்டும்; காளைகளை வெறியூட்டக்கூடாது; மாடுபிடி வீரர்கள் வருவாய்த்துறையினரிடம் பதிவு செய்ய வேண்டும்; போதைப்பொருள், ஊக்கமருந்து பயன்படுத்தக்கூடாது; இப்படியான 77 விதிமுறைகளில் பெரும்பாலானவை நியாயமாக இருந்தாலும் 2 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும் என்ற விதிமுறை ஜல்லிக்கட்டை முடக்கியது. பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டைக் கைவிட்டார்கள். இந்தச் சூழலில் முற்றிலுமாக ஜல்லிக்கட்டைத் தடை செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரியதன் பின்னணியில் இந்திய சந்தையை ஒட்டுமொத்தமாக கைகொள்ளும் நோக்கிலான அந்நியச் சதி இருப்பதாக கசியும் செய்திகள்தான் இப்போது திகிலூட்டுகின்றன.
கால்நடைகளும் சிக்கல்களும் ஒரு காலத்தில் விவசாயிகள் மந்தை மந்தையாகக் கால்நடைகளை வைத்திருந்தார்கள். பசுமைப்புரட்சி என்ற பெயரில் இயற்கை விவசாயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இந்திய வயல்களுக்குப் பொருந்தாத உபகரணங்களையும், உரம் பூச்சிக்கொல்லிகளையும் கொண்டு வந்து குவித்தார்கள். அதன் வழி இந்தியாவின் பாரம்பரிய விவசாயம் அழிந்து போனது.
வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நோய்களுக்குத் தாக்குப்பிடித்து காலங்காலமாக பலன் கொடுத்து வந்த தமிழகத்தின் நாட்டு மாட்டு ரகங்களை அழித்து வெளிநாட்டு கலப்பினங்களைக் கொண்டு வந்து குவித்தார்கள். கால்நடைகள் என்பது விவசாயத்துக்கே பிரதானமானது. பால் என்பது அதை வளர்க்கும் குடும்பத்துக்கு மட்டுமானது. ஆனால், பாலை ஒரு விற்பனைப் பொருளாக்கி கால்நடைகளுக்கும் மனிதர்களுக்குமான பந்தத்தைக் குலைத்துவிட்டார்கள். கலப்பின மாடுகளைப் பொறுத்தவரை பாலைத் தவிர அவற்றால் எந்த உபயோகமும் இல்லை. கூடுதலாகப் பால் தந்த கலப்பின மாடுகளோ பெருந்தீனி தின்றன. அடிக்கடி நோய் வாய்ப்பட்டன. தட்பவெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்தன.
பர்கூர், காங்கேயம், செம்மரை, ஆலம்பாடி, அலிகார், உப்பளச்சேரி, வெச்சூர், கோவைக்குட்டை, தார்பார்க்கர், கிர், சாகிவால், காங்கிரிஜ், ராட்டி, ரெட்சிந்தி என இந்தியாவில் 33 வகையான நாட்டு மாடுகள் இருந்தன. இந்த மாடுகள் பால் குறைவாகக் கறந்தாலும் அவற்றில் சத்து இருந்தது.
காங்கேயம் ரக மாடுகளை நோய், நொடிகள் எளிதில் தாக்காது. தீவனப் பற்றாக்குறை இருக்கும் நேரங்களில் பனை ஓலை, கொழுக்கட்டைப் புல் என்று கிடைத்ததை உண்டு, உழவு, இழுவை வேலைகளைச் சோர்வடையாமல் செய்யக்கூடிய ஒரு ரகம். காங்கேயம் பசு இரண்டு லிட்டருக்குக் குறையாமல் பால் கொடுக்கும். உம்பளாச்சேரி காளை டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய தொடைகால் சேற்றில் கூட தொடர்ச்சியாக 8 மணி நேரம் சோர்வில்லாமல் வேலை செய்ய வல்லது. இந்த மாட்டின் கால் குளம்பு, குதிரைக் குளம்பு போல இருக்கும். காலைத் தரையில் வைத்து இழுக்காமல் தூக்கிவைத்து நடக்கும். ஒவ்வொரு பசு மாடும் சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனக் கூடியது. இந்த ரக மாடும் தினமும் ரெண்டரை லிட்டருக்கு குறையாமல் பால் கொடுக்கக் கூடியது தான். இன்னும் பர்கூர் மலை மாடு, புலிக்குளம், மணப்பாறை, கண்ணாபுரம் என்று மாட்டினங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வளவு பெருமைகளோடு, காலம் காலமாகப் போற்றி வளர்த்த மாடுகள் அனைத்தையும் வெண்மைப் புரட்சிக்கு பலி கொடுத்துவிட்டோம்.
இன்றைக்கு காளைகள் உழுத நிலத்தில் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் டிராக்டர்கள் உழவு செய்கின்றன. காளைகள் மண்ணைச் செழிக்க வைக்க உரமிட்டது. ஆனால், டிராக்டர் டீசலைக் குடித்துவிட்டுப் புகையைக் கக்குகிறது.
விவசாயத்தை இயந்திரமயப்படுத்திவிட்டு நாட்டு மாடுகளை விவசாயத்தில் இருந்து அப்புறப்படுத்துவதே பன்னாட்டு நிறுவனங்களின் முதல் இலக்காக இருந்தது. அது நிறைவேறியதும், பால் வணிகத்தை முதன்மைபடுத்தி கலப்பினத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தின. நார்வே, சுவிட்சர்லாந்து நாடுகள் இத்தொழில்நுட்பத்தில் முன்னணியில் நிற்கின்றன.
இந்த மாடுகளின் பாலைக் குடிக்கும் குழந்தைகளின் இயல்பு மாறிவிடுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். சிறுமிகள் பத்து, பதினோரு வயதிலேயே பருவமடைந்து விடுகின்றனர். இதன் தொடர் விளைவு, நார்மல் டெலிவரிகளே அற்றுப் போய்விட்டன. 80 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவம் தான். ஆண்களுக்கு மலட்டுத் தன்மை அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் கலப்பின பசுக்களின் பாலே காரணம் என்கிறார்கள் சில மருத்துவர்கள். இந்தப் பாலில் இருக்கும் கேசின் என்ற புரதம் நீரிழிவு நோயைத் தூண்டக்கூடியது.
வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறையக் கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்துவிட்டன. இன்னும் மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச நாட்டு மாடுகளையும் அழித்துவிட்டு கலப்பின மாட்டுச் சந்தையாக தமிழகத்தை மாற்றுவதற்கான யுத்திதான் ஜல்லிக்கட்டுத் தடை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு விலங்குகள் நல அமைப்பு ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்ததோடு வழக்கிலும் தீவிர ஆர்வம் காட்டியது. இந்தியாவில் இருக்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பெரும் நிறுவனங்களின் நிதியைப் பெற்றுக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் மீது சந்தேகத்தைத் திருப்புகிறார்கள். உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடந்தபோதெல்லாம் நிறைய வெளிநாட்டுக்காரர்கள் வந்து விசாரணையை ஆர்வத்தோடு கவனித்ததாகவும் சொல்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்குப் பயன்படுத்தப்படும் புலிக்கோலம், காங்கேயம் காளைகள் மூலமாகவே தென் மாவட்டங்களில் நாட்டு மாடுகள் இனப்பெருக்கம் நடந்து வருகின்றன. ஒரு ஜல்லிக்கட்டுக் காளைக்காக தீவனம், பராமரிப்பு என்று பல ஆயிரங்களை மாட்டின் உரிமையாளர்கள் செலவு செய்வார்கள். ஜல்லிக்கட்டே இல்லை என்றான பிறகு அந்த மாடுகளை வைத்துப் பராமரிப்பதில் ஒரு பயனும் இல்லை. அது மாடு வளர்க்கும் நடுத்தரக் குடும்பத்துக்கு மக்களுக்கு பெரும் சுமை. அதனால் அவர்கள் மாடுகளை அடிமாட்டுக்கு கொண்டு போய் விற்றுவிடுவார்கள். அதைக் கேரளக்காரர்கள் வாங்கிக்கொண்டுபோய் வெட்டிச் சாப்பிடுவார்கள். அப்படியாக மிஞ்சியிருக்கும் நாட்டுமாட்டு ரகங்களும் அழிந்துபோகும். பிறகென்ன..? எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தில் கலப்பின மாடுகளை அல்லது அதற்கான விபரீத தொழில்நுட்பத்தை கொண்டு வந்து குவித்து காசு பார்க்கலாம்.
கலப்பின மாடுகள் உங்கள் ஊரில் முளைக்கும் புற்களைத் தின்னாது என்று சொல்லி நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து தீவனங்களைக் கொண்டு வரலாம். தீவனங்களுக்கான மலட்டு விதைகளை கொண்டு வந்து நிலத்தில் கொட்டலாம். ஒரு கட்டத்தில் மொத்த உணவுச் சந்தையையும் கைப்பற்றிவிடலாம். இதற்குத்தான் வெளிநாட்டு ஏஜென்ஸிகள் ஆர்வம் காட்டின என்கிறார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள். சில நடிகைகளும் பிரபலங்களும் மாட்டை வதைக்கிறார்கள் என்று குரல் கொடுப்பதும், ஒரு மத்திய அமைச்சர் வீட்டு விலங்கான மாட்டை காட்டு விலங்குகள் பட்டியலில் சேர்ப்பதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் சந்தேகத்தை வலுவடையவே செய்கின்றன. இந்தியா முழுவதும் நாளொன்றுக்கு பல்லாயிரம் கால்நடைகள் உணவுக்காக வெட்டிக் கொல்லப்படும் நிலையில், ஒரு சமூகத்தின் பாரம்பரிய விளையாட்டைத் தடை செய்தது ஏன் என்ற அவர்களின் கேள்வி நியாயமானதாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment