மத்திய அரசு நாட்டுப்பசுவினங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி திட்டம் என்பது மத்திய அரசின் எண்ணத்தில் நாட்டுப்பசுக்கள் பற்றிய சிறு எண்ணம் இருப்பதையும், தற்போது பசுக்கொலைகள் தொடர்வதால் பொதுமக்கள் மற்றும் ஹிந்து அமைப்புக்கள் மத்தியில் வலுத்து வரும் பா.ஜ.க. வெறுப்புணர்வை தணிக்கும் முயற்சியாகவுமே தெரிகிறது. எனவே, உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதகங்கள் என்ன? தேவையான மாற்றங்கள் என்ன என்பதை மறு ஆய்வு செய்யவேண்டியுள்ளது.
http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=107580
(1) முதலில் பசுக்களுக்கு ஒதுக்கியிருக்கும் இந்த வருடத்திற்கான தொகையான ரூ.150 கோடியோ அல்லது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ள ரூ.500 கோடியோ மிக மிக சொற்பமானது என்பதை கருத்தில் கொள்ளல் வேண்டும். இது யானை பசிக்கு கடுகுச்சோறு போன்றதாகும். இந்த தொகைகள், அன்றாடம் ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளும் பசுக்கொலைக்கூடங்களுக்கான முதலீடு, நவீனமயமாக்க செலவிடப்படும் தொகைகளைவிட சொற்பமானதாகும். மேலும், ‘பிங்க் புரட்சி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு போக்குவரத்து, குளிர் மையம், பேக்கிங், விளம்பரம் என பல்வேறு இனங்களில் 70% வரை மானியம், விற்பனை வரிச்சலுகை, வருமான வரிச்சலுகை என்று கணக்கிட்டு பார்த்தால் எங்கோ போய் நிற்கும். அதனோடு இந்த நிதி ஒதுக்கீட்டை ஒப்பிட்டால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
இந்த பிங்க் புரட்சி மூலம் வருஷம் சுமார் 26,000 கோடி வருமானம் கிடைக்கிறதாம். ஆண் எருமைகளையோ, சீமை மாடுகளையோ கொண்டு செல்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், நாட்டுப்பசுக்கள் வண்டி வண்டியாக கொலைக்கூடங்களுக்கு செல்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை. எருமை மாமிசம் என்ற பேரில் பசு மாமிசம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை அதிகாரிகளே தெரிவிக்கிறார்கள். இவ்வளவு ஏற்றுமதியும் வெறும் ஆண் எருமை மற்றும் உதவா மாடுகள் மூலம் மட்டுமே நடக்கிறது என்பதை குழந்தை கூட நம்பாது என்பதும் அறிந்த விஷயமே. அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் தெருவில் சுற்றும் மாடுகளை பிடிக்கவரும் அரசு ஊழியர்களை தாக்குவோரை தடுக்க கேமரா பொருத்திய வண்டிகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதமாக கடத்தப்படும் பசுக்களை தடுக்க சுங்கச்சாவடிகளில் முறையான கண்காணிப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் அதவும் கூட இயலாத சூழலே தற்போது உள்ளது. பசுபாதுகாப்பிற்காக புதிய சட்டங்கள் தேவை இல்லை. இருக்கும் சட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தினாலே பசுவதை பெருமளவு குறைந்துவிடும்.
(2) இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக உள்ளன. அதைபற்றிய விளக்கங்களை அரசுத்துறைகள் விவரிக்க வேண்டும். உதாரணமாக “improve the genetic makeup” “upgrade nondescript cattle using elite indigenous breeds” “distribution of disease free high genetic merit bulls” “AI centre “ (Artificial Insemination) போன்றவை. இதே அறிக்கையில் கடைசியில் சொல்லப்பட்டபடி 80% நாட்டுப்பசுவினங்கள் இன்னும் அடையாளம் காணப்படாத-அங்கீகரிக்கப்படாத இனங்களாகவே உள்ளன. அப்படியிருக்க மேற்சொன்ன வாக்கியங்களை படித்தால் இந்த அங்கீகரிக்கப்படாத இனங்கள் உயர்ந்த ரகங்கள் என்று சொல்லப்படும் பசு ரகங்களால் கலப்படம் செய்து அழிக்கபடுமோ என்ற கேள்வி எழுகிறது. மேலும், செயற்கை கருவூட்டல் என்பது இயற்கைக்கு விரோதமானதும் நீண்டகால நோக்கில் கெடுதலையுமே விளைவிக்கும். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 70 HF ரக காளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெள்ளையர்கள் நம் நாட்டு பசுவினங்களை ஆய்வு செய்த பொது பெரும்பாலான பசுவினங்களை ஒரே இனத்தின் கிளைகள் என்று கூறிவிட்டார்கள். அதன்பின் நாமும் அதை பற்றி பெரிய அளவில் கவலைப்படாமல் அதை பெரிய மாற்றமின்றி இன்றளவும் பின்பற்றுகிறோம். இன்னும் வரையறை செய்யப்படாத எண்ணற்ற பசு ரகங்கள், அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த திட்ட அறிவிப்பில் அதற்கான அறிவிப்புகள் இல்லாததோடு, அவ்வாறான வரையறைப்படுத்தாத பசுவினங்கள் கிர், சாஹிவால் போன்ற பசுக்களைக்கொண்டு மேம்படுத்தப்படும் என்று கூறியிருப்பது அவ்வினங்களின் தனித்துவம் அழிவின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
(3) மூன்றாவதாக, இந்த அறிக்கையில் கோகுல் கிராம் மற்றும் கோசாலைகள் போன்ற அமைப்ப்புக்கள் குறைந்தது ஆயிரம் பசுக்களோடு செயல்படும் என்று அறிவித்திருப்பது தற்போதைக்கு சரியென பட்டாலும் நீண்ட கால நோக்கில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டியதே. அறிக்கையின் சாராம்சம், பசுக்களை ஒரு வணிகப்பொருளாகவும், பால் மெஷினாகவும் பார்க்கும் மனோபாவத்தை வளர்ப்பதாகவும் உள்ளது. நமது நோக்கம் விவசாயி வீட்டுப்பசு முறை. இதுதான் நமது நாட்டின் பூர்வீக கலாசாரம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் பரம்பரை பசுக்கள் இருக்கும். சாதாரண விவசாயி முதல் அரசர்கள் வரை இவை உண்டு. கல்யாணம் செய்யும்போது சீதனமாக வரும் பெண் வீட்டு பசு வர்க்கம் ஆண் வீட்டு பசு வர்க்கத்தோடு கலக்கும். இதனால் அந்த குடும்ப வாரிசுகளைப்போலவே அந்த குடும்பப்பசுவும் அதன் வர்க்கத்தை பெருக்கும். இது ஒரு அற்புதமான அமைப்பு. இப்படி குடும்பப்பசு முறை இருந்ததால்தான் பஞ்ச காலத்தில் கூட விவசாயிகள் மாடுகளை விற்காமல்-கொல்லாமல் இருந்தனர் என்று வெள்ளையர்கள் வியந்து எழுதினர். ஒரு பெண் புதிதாக கல்யாணமாகி வரும்போதும், ஒரு வீட்டுக்கு குடிபோகும்போதும் பால் காய்ச்சுவதே முதல் பணியாகும். அரசர்கள் பட்டாபிஷேகத்தின் போது அவர்கள் வர்க்க பசுவுக்கு மரியாதை செலுத்தி வணங்கப்படும். அது இன்றளவும் தொடர்கிறது.
கொங்கதேசம்-தென்கரை நாடு வேணாவுடையார் பட்டாபிஷேகத்தில்
மேலும் நாட்டுப்பசு என்பது மனிதன்-விவசாயம்-இயற்கை இம்மூன்றிற்கும் இடையிலான மிக முக்கியமான கண்ணியாகும். வெறும் பால் மெஷின், விவசாயப்பிராணி என்று பார்க்காமல், நேரடியாக நல்ல பால் பொருட்கள் மூலமும் மறைமுகமாக இயற்கை வேளாண்மைக்கு உதவுவதன் மூலம் நோய்கள் தவிர்ப்பு, மருத்துவ செலவினங்கள் தவிர்ப்பு, தேவையற்ற உர இறக்குமதிகள் தவிர்ப்பு, மனிதவளம் சேமிப்பு, சீமை மாடுகளுக்கு செலவாகும் மும்மடங்கு தீவன-நீர் சேமிப்பு, நோய் தாக்கு குறைவு என்று கணக்கிலடங்கா பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே நாட்டுப்பசுக்களை வாழ்வின், இயற்கையின் அங்கமாக பார்க்கும் பார்வை அரசுத்துறையினருக்கு வர வேண்டும்.
பாராட்டும் விதமாக முதலில், நாட்டுப்பசுக்களை பற்றிய சிந்தனை வந்திருப்பதே பாராட்டக்கூடிய ஒன்றுதான். இரண்டவாது A2 பால் பற்றி அரசு தரப்பில் வந்துள்ள செய்தி என்பதும், பசுவின் மூலம் பெறக்கூடிய மருத்துவ பொருட்கள் போன்றவற்றை அங்கீகரித்திருப்பதும் பாராட்டலாம். விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விருதுகள், சங்கங்கள் போன்றவையும் வரவேற்க வேண்டிய ஒன்று.
மோடி ஆதரவாளர்கள், ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி இயக்கங்கள் தங்கள் தலைமைக்கு அழுத்தம் தர வேண்டும். சாதுக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி, திக்விஜய்சிங் போன்ற எதிர்கட்சியினர் கூட பசுவதைத் தடையை ஆதரித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லாதிருப்பது வருத்தத்திற்குரியது.
நாட்டுப்பசுக்கள் அழிவிலிருந்து நிரந்தரமாக காப்பாற்ற என்னெல்லாம் செய்யலாம்? உதாரணமாக பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானையே எடுத்துக்கொள்வோம். ராஜஸ்தானில், மாநில அரசு ஒட்டகங்களை காக்க அவற்றை மாநில விலங்காக அறிவித்து, அதன் கொலையை முழுமையாக தடை செய்துள்ளது. (ஆயினும் பாரம்பரிய ஒட்டக ரேஸ் தடை செய்யப்படவில்லை என்பதை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் கவனிக்கவும்!). இதே ராஜஸ்தானில் பசுவதை தடைக்கு என தனி அமைச்சகமே உள்ளது. அதேபோல யானைய காக்க மத்திய அரசு யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்துள்ளது. இஸ்கான் பசுக்களுக்கென தனி பல்கலைக்கழகம் துவங்கப்போவதாக அறிவித்து வேலைகளை துவங்கியுள்ளார்கள். இதை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகளில் பஞ்சகவ்ய மருத்துவம் மற்றும் மருந்துகள் பற்றிய பாடங்கள் வைக்கபப்ட வேண்டும். அதுபோல நாட்டுப்பசுவை தேசிய விலங்காக அறிவித்து, நாட்டுப் பசுக்கொலையை முழுவதும் தடை செய்து, நாட்டுப்பசுக்களுக்கென தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள், நாட்டுப்பசு மைய பொருளாதார ஊக்குவிப்பு போன்றவற்றை அரசு கையிலெடுக்க வேண்டும்.
நாட்டுப்பசுக்கள் வளர்ப்போர் ஸ்திரமான பொருளாதார தற்சார்பு நிலை எட்ட அடித்தளங்கள் உருவாக்காமல், வெறுமனே பசுவதை தடைச்சட்டம் என்று கொண்டுவந்தால் அது கடைசியில் விவசாயிகளுக்கு கேடாகத்தான் முடியும். அதாவது வெளிநாடுகளைப்போல நாட்டுப்பசுவின் A2 பாலுக்கு அதிக விலை, நாட்டுப்பசுவிலிருந்து பாலல்லாத பிற பொருட்கள் தயாரிப்பு, விவசாயத்தில் உரத்தேவையில் நாட்டுப்பசுக்களின் பங்கு, சந்தை விரிவாக்கம்-உருவாக்கம் போன்றவை, அவை குறித்த விழிபுணர்வு போன்றவற்றை செய்யாவிட்டால் பசுக்களே விவசாயிகளுக்கு பாரமாக போய்விடும். மேற்கூறிய முயற்சிகளை தற்போது அரசு சார்பற்ற தன்னார்வலர்களும் தொண்டு அமைப்புக்களும் செய்து வருகின்றன. ஆனால் தற்போதைய அறிவிப்பு அவ்விதமான அடித்தளங்கள் உருவாக்க உதவுமா என்று சந்தேகம் ஏற்படுத்துகிறது.
http://www.tamilhindu.com/2014/08/நாட்டுப்-பசுக்களுக்காக-ம/