மகாராஷ்டிராவின் 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'வில் பயிற்சி பெற்று, தமிழகத்தில் 'அர்க்' உள்ளிட்ட மருந்துப் பொருட்களைத் தயாரித்து வருகிறது 'சுரபி பசு பாதுகாப்பு இல்லம்'. சேலம், தெற்குஅம்மாபேட்டை பகுதியில் உள்ள நாம மலை அடிவரத்தில் 'ஸ்ரீராஜராஜேஸ்வரி மகிளா சமாஜம்' சார்பில் இந்த இல்லம் இயங்கி வருகிறது.சமாஜத்தைச் சேர்ந்த சுவாமி ஆத்மானந்தாவைச் சந்தித்தபோது, "இங்கே 142 பசுக்கள் உள்ளன. அவற்றிலிருந்து கிடைக்கும் பால், சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி... குளியல் சோப்பு, பற்பொடி, ஷாம்பு என பல வகையானப் பொருட்களை 2000-ம் ஆண்டிலிருந்து தயாரித்து வருகிறோம். இவற்றில் 'அர்க்' மிகமுக்கி யமானது. 'அர்க்' என்றால், ஒரு பொருளில் இருந்து தூய்மைப் படுத்தப்பட்ட பொருள் என்று அர்த்தம்.
சித்த மருத்துவத்தில் வாழை வடிநீர் தயாரிப்பது போல, மாட்டின் சிறுநீரை மண் பானையில் ஊற்றி காய்ச்சி வடிகட்ட வேண்டும். 20 லிட்டர் சிறுநீரை ஊற்றி, குறிப்பிட்ட வெப்பத்தில் 2 மணி நேரம் தொடர்ச்சியாக காய்ச்சினால், 2 லிட்டர் அர்க் கிடைக்கும்.
50 மிலி, 25 ரூபாய் வீதம் விற்பனை செய்கிறோம். 1 லிட்டர் 500 ரூபாய். நாக்பூர் கேந்திராவில் மிகநுணுக்கமான சாதனங்களையும் பலவிதமான தொழில் நுட்பங் களையும் பயன்படுத்தி அர்க் தயாரிக்கிறார்கள். அதனால், 20 லிட்டர் சிறுநீரில் 13 லிட்டர் அர்க் கிடைக்கிறது. இதன் காரணமாக குறைவான விலைக்குக் கொடுக் கிறார்கள்.
கேன்சர் முதல் சர்க்கரை நோய் வரை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது, இந்த அர்க். நல்ல உடல் நலம் உள்ளவர்கள் இதைக் குடித்தால் உடலில் உள்ள திசுக் களின் வேலையை வேகப்படுத்தும். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும். ஆயுர்வேத மற்றும் சித்த மருந்து விற்கும் கடைக்காரர்களிடம், இதற்கு தேவை இருக்கிறது.
ஒரு லிட்டர் சிறுநீர் 5 ரூபாய்!
பசு மூலமாகக் கிடைக்கும் மருந்துப் பொருட்களுக்கு மட்டுமில்லை. அதன் சிறுநீருக்குக் கூட தேவை அதிகமாக உள்ளது. கர்நாடகாவில் உள்ள ஒரு அமைப்பு, நாட்டுப் பசுவின் சிறுநீரை லிட்டர் 5 ரூபாய் என்று விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறது. அதிலிருந்து அர்க் போன்ற பொருட்களைத் தயாரித்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.
பாலுக்காக வளர்த்த காலம் போய்... சாணம், சிறுநீர் என மற்றப் பொருட்களுக்காக வளர்க்கும் காலம் துவங்கியிருக்கிறது. கிராமங்களில் வேலை இல்லை என்று சொல்லி ஊர் ஊராக வேலை தேடி அலைவதைக் காட்டிலும்... உள்ளூரில் உட்கார்ந்து கொண்டு, பசுமாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி பலவிதமான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யலாம்.
நாட்டுப் பசுமாடு ஒன்றின் விலை கிட்டத்தட்ட 7 ஆயிரம் ரூபாய். 5 மாடுகள் 35 ஆயிரம் ரூபாய். மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் உபகரணங்கள் வாங்க 10 ஆயிரம் ரூபாய். மாட்டுக் கொட்டகை மற்றும் மாடு மேய்த்தல் போன்றவற்றுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய். ஆக மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் மாதம் 10 ஆயிரம் உறுதியாக லாபம் கிடைக்கும்" என்று அழுத்தமாகக் குறிப்பிட்ட ஆத்மானந்தா, "ஆண்டுக்கு ஒரு முறை வெளி இடங்களில் இதற்கான பயிற்சியைக் கொடுத்து வருகிறோம். அதிகமான நபர்களுக்கு பயிற்சி தேவை என்றால்... எங்கள் இடத்திலேயே கூட பயிற்சி அளிக்கிறோம். இதற்காகக் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை" என்றார்.
தொடர்புக்கு: சுரபி பசு பாதுகாப்பு இல்லம், ஸ்ரீ குருதேவ் குருகுலம், ஸ்ரீநகரம், தெற்குஅம்மாப்பேட்டை, சேலம்- 636 014. அலைபேசி:94432-29061.
No comments:
Post a Comment