Wednesday 19 June 2013

கோசேவையால் இறை நிலை அடைந்த குப்பண்ண பரதேசியார்




திருச்செங்கோடு வட்டம் வட்டூர் கிராமத்தில் கொங்கு வெள்ளாளர் சமூகத்தில்-செங்குண்ணி குலத்தில் குப்பண்ணன் என்பார் அவதரித்தார். அந்நாளில் முதல் இறு குழந்தைகள் இறந்து பிறந்தால் மூன்றாம் குழந்தையை குப்பையில் போட்டு குப்பன் என்று பெயர் சூட்டி மூக்கு குத்தி வளர்ப்பது வழக்கம். அதனால் பாலாரிஷ்ட தோஷங்கள் விலகும் என்பது ஆன்றோர் வாக்கு. பல இடங்களிலும் அதுபோல செய்து குழந்தை இறப்பு நின்றுள்ளது. அதனால் தான் அந்நாளில் அத்தனை குப்பண்ணன் இருந்தார்கள்.

அப்படி அவதரித்த குப்பண்ணன், சிறு வயது முதலே இறையருள் நிரம்பியவராக - இறை நிலை உணர்ந்தவராக, சாமானியர் பார்வைக்கு பரதேசி போல இருந்தார். சில காலத்தில் திருசெங்கோட்டு ஆண்டவர் மீது பக்தி மேலிட அங்கு சென்று பூஜைக்கு தேவையான பாலினை கறந்து கொடுத்துக்கொண்டும் கோபூஜை செய்து கொண்டும் இருந்தார். மலையருகே வரடிக்கல் (உச்சி பிள்ளையார் கோவில்) செல்லும் வழியில் உள்ள குகையுள் வசித்து வந்தார்.

அதன் பயனாக இறையருள் சித்திக்க, அடியார்களுக்கு வாக்கு சொல்வது, குழந்தை பிரச்சனை, எதிரிகள் தொல்லை, நோய்-நொடி போன்ற மக்கள் துன்பங்களுக்கு திருநீறு மந்திரித்து தருவது போன்று நாடி வந்தோர்க்கு நற்செயல் புரிந்தார். இதனால் இவர் புகழ் வேகமாக பரவியது. குப்பண்ணன் குப்பண்ண பரதேசி என பரவலாக அறியப்பட்டார். இவர் உணவு உண்டு யாரும் பார்த்ததில்லை என்பதும் வரலாறு.

அவரின் நினைவாக பின்னாளில் அவர் சார்ந்த செங்குண்ணி குல கொங்கு வெள்ளாளர் மலையில், அவர் வாழ்ந்த குகையில் மடம் அமைத்து திருப்பணி செய்து வருகிறார்கள். நல்ல ஆத்மா வாழ்ந்த இடமாகியதால் ஆத்ம சக்தி நிரம்பியுள்ள இடமாக இருக்கிறது. இங்கு வருவோருக்கு குடும்ப-சமூக-சொத்து-எதிரிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது என்பது இன்றும் நடைபெறும் அதிசயம்.

No comments:

Post a Comment