Wednesday 19 June 2013

கோசேவையால் வாழ்வு பெற்ற திலீப சக்ரவர்த்தி வரலாறு



அயோத்தியை திலீபன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவன் ராமனின் முன்னோர்களில் ஒருவன். திருமணமாகி பல ஆண்டுகளாகியும், பிள்ளைப்பேறு வாய்க்கவில்லை. பல தலங்களுக்குத் தீர்த்தயாத்திரை சென்று வந்தும் பயனில்லை. தன் குலகுரு வசிஷ்டரைச் சந்தித்து ஆலோசனை கேட்டான். அவனது முகக்குறிப்பைத் தெளிவாக உணர்ந்து கொண்ட வசிஷ்டர், திலீபா! ஏன் வாட்டத்துடன் இருக்கிறாய்? என்று கேட்டார். குருவே! என்னிடம் செல்வம் இருந்தும் என்ன பயன்? பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லையே ! என்று வருந்தினான். கண்களை மூடி தியானித்த வசிஷ்டர், ஞானதிருஷ்டியால் விஷயத்தை அறிந்தார். திலீபா! தேவலோகத்திற்கு ஒருமுறை சென்றபோது, அங்கு ö தய்வப்பசு வான காமதேனுவை வணங்காமல் அலட்சியம் செய்தாய். வருந்திய காமதேனு உன்னை சபித்துவிட்டது. அதனால் உனக்கு இக்கதி நேர்ந்தது, என்றார். அறியாமல் பிழை செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள். காமதேனுவின் மனம் குளிர ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள், என்றான்.


ஒன்றும் வருந்தாதே! காமதேனுவின் கன்றான நந்தினி, நமது ஆஸ்ரமத்தில் தான் இருக்கிறது. அதற்கு வேண்டிய உணவு, உறைவிடத்திற்கு ஏற்பாடு செய். கன்றின் மனம் குளிர்ந்தால் தாயின் மனமும் குளிர்ந்துவிடும், என்றார் வசிஷ்டர். திலீபன், அரண்மனைக்கு நந்தினியை அழைத்துச் செல்லும் எண்ணத்துடன் தேடிச் சென்றான். ஆனால், நந்தினி அவன் கையில் சிக்காமல் ஓடத் தொடங்கி யது. அதனைப் பிடிக்க விரட்டினான். ஆனால், அது சிக்கவில்லை. வெகுநேரம் விரட்டிச் சென்றதால் மிகவும் களைப்படைந்தான். வெயிலும் அதிகரித்தது. அங்கிருந்த மலைச்சாரலில் ஒரு மரம் மட்டும் இருந்தது. நிழலுக்காக, கன்று மரத்தடியில் ஒதுங்கியது. எதிர்பாராமல் புதரில் இருந்த சிங்கம் வெளிப்பட்டது. பயத்தில் கன்று வெலவெலத்துப் போனது. திலீபனும் கன்றைக்காப்பாற்ற முயன்றான். அப்போது சிங்கம் அசுரவடிவெடுத்தது, அவன் அட்டகாசமாகச் சிரித்தான். மன்னவனே! என் பெயர் கும்போதரன். இம்மரம் எனக்குச் சொந்தமானது. யார் இந்த மரத்தை நெருங்கினாலும், அவர்களைக் கொன்று இரையாக்குவது என் உரிமை. அந்த வகையில் இக்கன்று எனக்கு இரையாகப் போகிறது. இதை தடுக்க உம்மால் முடியாது, என்று கர்ஜித்தான். எனவே, திலீபன் அசுரனுடன் சண்டையிட ஆரம்பித்தான்.

இருந்தாலும் களைப்பு காரணமாக அவனால் போரிட இயலவில்லை. கடைசியில், அசுரனே! என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். இப்பச்சிளங்கன்றைக்கொல்லாதே!, என்று மன்றாடினான். அப்போது வானில் காமதேனு பசு தோன்றியது. திலீபனே! உன்னை பரீட்சிக்கவே இவ்விளையாடலைச் செய்தேன். ஒன்றும் பயப்படாதே. ஆணவத்தோடு அன்று அலட்சியம் செய்ததால், அதற்கான தண்டனையை அனுபவித்தாய். இப்போதோ, கன்றுக்காக மனமிரங்கி உயிரையும் தரத்துணிந்தாய். உள்ளத்தில் அன்பும், பணிவும் இருந்தால் கடவுளின் அருள் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள். உன் குலம் தழைக்க உனக்கு ஒரு குழந்தை பிறப்பான், என்று சொல்லி மறைந்தது. அங்கிருந்த அசுரனும், நந்தினியும் கணப்பொழுதில் மறைந்தனர். மன்னன் திலீபன் தன் குலகுரு வசிஷ்டரிடம் நடந்ததைச் சொல்லி மகிழ்ந்தான். ரகு மகாராஜா திலீப மகாராஜாவுக்கு வாரிசாக அவதரித்தார்.

No comments:

Post a Comment