மண்ணின் வளம், தட்ப வெப்பம், அங்கு விளையும் தீவனங்கள் இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற நாட்ட இன மாடுகளை, நம் முன்னோர் வகைப்படுத்தி வளர்த்து வந்தார்கள். அந்தந்த மாடுகள் வளரும் பகுதிகளை வைத்தே காங்கேயம், மணப்பாறை, உம்பளாச்சேரி என பெயரிட்டு அழைத்தார்கள்! ஆனால், கலப்பின மாடுகளின் வருகைக்கு பிறகு, பாரம்பரிய இனங்களுக்கு கலப்பினக் காளைகளின் உறைவிந்து செலுத்தப்பட்டு பாரம்பரிய இனங்களின் தனித்துவம்.. அழிய ஆரம்பித்துவிட்டது. இத்தகையக் கொடுஞ் சூழலிலும்.. பாரம்பரிய இனங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வரும் விவசாயிகள் தமிழகம் முழுக்கவே ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், காவிரி டெல்டா பகுதியின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான ‘உம்பளாச்சேரி’ இன மாடுகளின் எண்ணிக்கையைப் பெருக்கி, பாதுகாத்து வருகிறார்கள் நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களின் எல்லையோரத்திலுள்ள உம்பளாச்சேரி, கொருக்கை கிராம மக்கள். உம்பளாச்சேரி மாடுகளின் மகத்துவத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததால், அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சென்று, இந்த இனத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டி வரும் இப்பகுதி விவசாயிகள், பெரும்பாலும் உம்பளாச்சேரி ரக மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இப்படித்தான் இருக்கும் உம்பளாச்சேரி!
இதைப் பற்றி பெருமையோடு பேசிய, ‘உம்பளாச்சேரி பாரம்பரிய கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் தீனதயாளன், இந்த பகுதியில் இயற்கையாகவே ‘உப்பளப்புல்’ என்ற ஒரு வகையான புல் அதிகமாக வளர்ந்திருக்கும். இதை ‘உப்பள் அருகு’ என்று சொல்லுவாங்க. இதுதான் மருவி உப்பளச் சேரி என்று மாறி .. கடைசியில் ‘உம்பளாச்சேரி’ என்று வந்து நிற்கிறது. அதுவே எங்க ஊருக்கும், இந்த பகுதி மாட்டிற்கும் பெயராகிவிட்டது. இந்த மாடுகளை, தெற்கத்தி மாடு, மோழை மாடு, மொட்டை மாடு, தஞ்சாவூர் மாடு எனும் பல பெயர்களில் சொல்லுவாங்க. நெத்தி வெள்ளை, வால்வெள்ளை, கால் வெள்ளை என்பதுதான் இந்த மாடுகளோட அடையாளம். அதாவது.. நெற்றியில் வெள்ளை கலரில் நட்சத்திர வடிவம் இருக்கும். வாலோட நுனிப்பகுதி முழுசுமாகவோ, ஒரு பகுதி மட்டுமோ... நல்ல வெள்ளை கலரில் இருக்கும். காலில் குளம்பிற்கு மேலே வெள்ளை நிறத்தில் வளைய அடையாளம் இருக்கும். குட்டையான, கூர்மையான கொம்பு, குட்டையாக படுக்கை வசமான காது மடல், சின்னதாக அழகாக இருக்கும் அலை தாடி, குட்டையாக இருந்தாலும் பலமாயிருக்கும் கால்கள், சின்னக் குளம்பு, குட்டையான வால், சின்னதாக அதிக இடைவெளியில் இருக்கும் பால் காம்பு, இதுதான் ஒரிஜினல் உம்பளாச்சேரி மாடுகளின் அடையாளம் என நுட்பமாக பட்டியலிடும் தீனதயாளனிடம் 25 உம்பளாச்சேரி மாடுகள் இருக்கின்றன.
தீவனச்செலவே இல்லை!
இதே சங்கத்தைச் சேர்ந்த கொருக்கை பகுதிக்கான தலைவர் ஜானகிராமன், உம்பளாச்சேரி இன மாடுகளுக்குள்ளேயே ஆட்டுக்காரி மாடு, வெண்ணா மாடு, கணபதியான் மாடு என்று பல உட்பிரிவு இருக்கு. ஆனால்.. இப்ப எங்களால் அதை தெளிவாக அடையாளப்படுத்திச் சொல் முடியவில்லை. இந்த மாடுகளுக்கு தீவனச் செலவே கிடையாது. முழுக்க முழுக்க மேய்ச்சல் மட்டும்தான். ஆனாலும் கூட, மனசு கேக்காமல், தினமும் ஒரு மாட்டுக்கு 2 கிலோ தவிடும், அரைக்கட்டு வைக்கோலும் கொடுப்போம். அதிக நோய் எதிர்ப்பு சக்தி, சோர்வு இல்லாத உழைப்பும்தான் இந்த மாடுகளோட சிறப்பு. டெல்டா பகுதியோட சேறு பத்தி சொல்லவே வேணாம். அப்படிப்பட்ட சேத்தில் தொடர்ந்து 8 மணிநேரம் ஏர் பூட்டி உழுதாலும்.. சோர்வில்லாமல் இருக்கும். இதோட கால் குளம்பு, குதிரையோட குளம்பு போலவே இருக்கும். கால தரையில் வைத்து இழுக்காமல் தூக்கி வைத்து நடக்கும். கிடேரிக் கன்னுகளை 3 வயதில் பருவத்திற்கு வரும். சினை பிடித்ததிலிருந்து 281 – ம் நாள் கன்னு ஈனும். ஒரு பசு... சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனும். தினமும் இரண்டரை லிட்டர் பால் கொடுக்கும். இதில் சத்து அதிகம். 9 லிருந்து 12 மாதம் வரைக்கும் கறவை இருக்கும்.
கோடையில் பராமரிக்கும் கோனார்கள்!
இந்தப் பகுதியில் கிடை சேர்க்கும் கோனார்கள் இருக்காங்க. கோடைக் காலத்தில் பசுந்தீவனம், தண்ணீருக்கு தட்டுப்படாக இருக்கும். அந்த நேரத்தில் மாடுகளைப் பராமரிக்க முடியாமல் விவசாயிங்க கஷ்டப்படுவாங்க. அவங்களுக்கு உதவுறதுதான் கோனார்களோட வேலை. தை, மாசியில் நெல் அறுவடை முடிந்ததும், மாடுகளை கோனார்கிட்ட ஒப்படைச்சுட்டால், அவங்க மேய்ச்சி, முறையாக பராமரித்து, கிடைக்கு பயன்படுத்திட்டு.. வைகாசி மாதம் திரும்ப உரியவங்ககிட்ட ஒப்படைச்சுடுவாங்க. இதற்கு ஒரு மாட்டுக்கு கூலியாக 100 ரூபாய் கொடுத்தால் போதும்.எல்லா மாடுகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு கிடையா மேய்ப்பாங்க. ஒரு கிடையில் சுமாராக 500 பசு மாடுங்களும்.. 2 பொலிக்காளைங்களும் இருக்கும். மேய்ச்சலுக்குப் போகும் போது கிடையில் இரக்கும் காளைகளோட, இணைந்து, பசு மாடுகள் சினை ஆயிடும். பொதுவாக இந்தப் பகுதியில் சாகுபடிக்கு முன்ன கோனார்க்கிட்ட சொல்லி நிலத்தில் கிடை போடுவாங்க. உள்நாட்டில் இருக்கும் நாட்டு இன மாடுகளிலேயே, இந்த உம்பளாச்சேரி மாடுகளோட கழிவில் நல்லது செய்யும் பாக்டீரியா அதிகமாக இருக்குனு சொல்றாங்க. அதனால், மண்ணுக்கு நிறைய சத்து கிடைக்கிறது. ஒரு ஏக்கர் நில்திற்கு, ஒரு நாளைக்கு கிடை போட, 1,600 ரூபாய் கொடுக்கணும். இதன் மூலமாக கோனார்களுக்கும் வருமானம் வந்துவிடும்.
100% மானியத்தில் மாடுகள்!
இந்த இன மாடுகளோட, வேற இனங்களை கலந்துடாக்கூடாது என்பதில் எங்க சங்கம் மிகவும் கவனமாக இருக்கு. இந்த பகுதிகளில் இருக்கும் உம்பளாச்சேரி மாடுகளுக்கு இதே இன மாடுகளோட உறைவிந்தைத்தான் செலுத்தணும் என்று கலெக்டர், முதலமைச்சர்கிட்ட கோரிக்கை வைத்து, வெற்றி அடைந்திருக்கோம்.எங்க சங்கத்தோட முயற்சியால், விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உம்பளாச்சேரி மாடுகளை வாங்கி கொடுத்து இருக்கோம். உம்பளாச்சேரியில் மட்டுமே சுமார் 2 ஆயிரம் மாடுகளும், கொருக்கையில் ஆயிரம் மாடுகளுக்கு மேலையும் இருக்கு. இன்னும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் பல ஆயிரம் மாடுகள் இருக்கு. இதை பல லட்சமாக பெருக்கணும் என்பதுதான் எங்க லட்சியம். அதற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக செய்துகிட்டு இருக்கோம் என்றார் ஜானகிராமன்.
தொடர்புக்கு
ஜானகிராமன், செல்போன் : 93454 - 48550
ஜானகிராமன், செல்போன் : 93454 - 48550